Sunday, November 17, 2013

ஜோதிட சூக்சுமங்கள் Part - 1.

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும் போதே இந்த ஜாதகம் எப்படிப் பட்டது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். பல ஜோதிடர்கள் பல விதமான யோகங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். மேலோட்டமாக யோகங்களை ராசிச் சக்கரத்தைக் கொண்டு மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதனை அவர்கள் புத்தகங்களில் வெளியிட்டு அதனை அனைவரும் நம்பி நடக்கக் கூடிய விஷயங்கள் யாவும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் போது நொந்து நூலாகி விடுகிறார்கள்.

பொதுவாக ஆயிரக் கணக்கான யோகங்கள் இருக்கின்றன. இங்கே இப்போது தர்ம கர்மாதி யோகத்தின் சூக்சும விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறேன்.

தர்ம, கர்மாதி யோகம் என்பதன் விளக்கம்:

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 9ம் வீடு பாக்கிய ஸ்தானம் என்றும், தர்ம ஸ்தானம் என்றும் சொல்லப் படுகிறது. அதே போல் 10ம் வீடு கர்ம ஸ்தானம் என்று சொல்லப் படுகிறது.

இந்த தர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும், கர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும் தங்களது வீட்டை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மாற்றிக் கொள்வது அதாவது தங்களது வீட்டைப் பரிவர்த்தனை  செய்து கொள்வது என்பது தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்யும். அல்லது

இந்த இரு வீட்டிற்கு உரிய கிரகங்களும் இணைந்து தங்களது வீட்டைப்  பார்வையிட்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.அல்லது

தர்மாதிபதியும், கர்மாதிபதியும் சுப வீடுகளாகச் சொல்லப்படும் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் இடம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள். அதே போல் 2, 11ம் வீடுகளில் நின்றாலும் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டால் இந்த யோகத்தைச் செய்வார்கள்.

ஆனால் இது சுப பலனைச் செய்கின்ற யோகமா? அல்லது அசுப பலனைச் செய்கின்ற யோகமா? என்பதைத்தான் ஆராய வேண்டும்.

ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை அவ யோகத்தையும் யோகம் என்றுதான் சொல்கிறது. இப்போது சூக்சும பலனுக்கு வருவோம்.

ஏற்கனவே சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு 11, 9, 7 ஆகிய வீடுகள் பாதக ஸ்தானமாக செயல்படும் என்று கூறியிருக்கிறேன். அதே போல் தர்ம, கர்ம அதிபதிகள் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம், க்ர்மாதிபதி யோகத்தைச் செயவார்கள் என்றும் மேலே கூறியிருக்கிறேன்.

ஆகையினால் தர்ம, கர்ம அதிபதிகளில் இருவருமோ அல்லது ஒருவராவதோ இந்த பாதக ஸ்தானங்களில் ஏதெனும் ஒன்றில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்தால் அவயோகங்களைத் தனது திசா காலத்தில் அந்த ஜாதகரை அனுபவிக்க வைப்பான் என்பதுதான் உண்மை. இதிலும் இன்னும் சூக்‌ஷும விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு சர லக்னத்தை எடுத்துக் கொண்டோமேயானால்  அந்த  சர லக்னத்திற்கு 11மிடமான பாதக ஸ்தானத்தில் 9ம் வீட்டுக்குரியவன் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசி பாதக ஸ்தானமாக வரும். இந்த வீட்டில் இந்த மேஷ லக்னத்திற்கு 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் அமர்ந்திருந்தால் அவர் தனது திசா புக்திக் காலத்தில் என்ன செய்வார்? என்று பார்க்கலாம்.

எப்போதுமே பலன்களைத் துல்லியமாக அதாவது சூக்சுமமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 11ம் வீடு லாபஸ்தானம். பாக்கியாதிபதி  லாபஸ்தானத்தி
லிருந்து கொண்டு அவனது திசா காலத்தில் அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று பகல் கனவு கண்டு இருக்கும் செல்வத்தையும் கோட்டை விட்டு விட்டு அந்த ஜோசியர் சொன்னார், இந்த ஜோசியர் சொன்னார் என்று அகலக்கால் வைத்ததனால் வந்த பலனை அனுபவித்து அல்லல் பட்ட பிறகே, “ஆஹா! நமக்கு நடந்தது யோகமல்ல. அவ யோகம்” என்று நினைத்து நொந்து நூலாகிப் போகிறார்கள்.

இங்கேதான் சூக்சும விஷயத்தை யோசிக்க வேண்டும். 11மிடம் பாதக ஸ்தானமாக வரும் நிலையில் லாப ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 9ம் வீடு பாதக ஸ்தானமாக வரும் பொழுது பாக்கிய ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 7மிடம் பாதக ஸ்தானமாக வரும் போது களஸ்திர ஸ்தானமாக செயல் படாது.

11மிடம் லாபத்தைக் கெடுக்கும். 9மிடம் பாக்கியத்தைக் கெடுக்கும். 7மிடம் களஸ்திரத்தைக் கெடுக்கும்.

இன்னும் சூக்சும விஷயங்கள் இருக்கின்றன.  சுப வீடுகள் என்று சொல்லப் படும் திரிகோண ஸ்தானங்கள், கேந்திர ஸ்தானங்கள், லாபம் என்று சொல்லும் 11ம் வீடு, தன வருவாய்க்குரிய 2ம் வீடு இவை யாவுமே சிற்சில சமயங்களில் துன்பத்தைத் தனது திசா காலங்களில் கொடுப்பதுண்டு. அதாவது சுப வீடுகளுக்குரிய கிரகங்கள் பாதக ஸ்தானங்களிலோ அல்லது ருண ரோக ஸ்தானமான 6ம் வீட்டிலோ, அல்லது பாதக வீட்டதிபதியின் நட்சத்திரத்திலோ, அல்லது 6ம் வீட்டதிபனின் நட்சத்திரத்திலோ நின்றால் அவர்களும் கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார்கள்.

இப்போது தர்ம கர்மாதி யோகத்தைப் பற்றிப் பார்ப்போம். 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் 10ம் வீடாகிய மகரத்திலும், 10ம் வீட்டுக்குரிய சனி பகவான் தனுசு ராசியிலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த 9, 10க்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்று எப்படி தர்ம, கர்மாதிபதி யோகத்தை எப்படிச் செய்வார்கள்?  என்று பார்க்கலாம்.

அதாவது 10ம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் ராசிச் சக்கரத்தில் மகர ராசியில் நீச நிலை அடைகிறார். இந்த ராசியில் உத்திராடம் 2, 3, 4 பாதங்களும், திருவோணம் 1, 2, 3, 4 பாதங்களும், அவிட்டம் 1, 2 பாதங்களும் இடம் பெறுகின்றன.

இவற்றில் குரு பகவான் மகர ராசியில் ராசிச் சக்கரத்தில் இடம் பெற்று உத்திராடம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டிலும் அதே நீச நிலையில் மகர ராசியிலேயே இடம் பெற்று பலமிழந்த நிலையில் பாக்கிய ஸ்தானங்களுக்குரிய நன்மைகளையும் 10ம் வீட்டிற்குரிய நனமைகளையும் செய்ய முடியாமல் அந்த வீடுகளுக்குரிய காரக பலன்கள் கெட்டு கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார். 

உத்திராடம் 3ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கும்ப ராசியில் நட்புறவுக்குரிய சனி பகவானின் வீட்டில் நின்று கெடு பலன்களையே செய்வார். காரணம் நீசம் பெற்ற குரு பகவான் கெட்டவராகி கெடு பலன்களைச் செய்ய வேண்டும் என்று எண்ணும் போது நவாம்சக வீட்டில் நட்புறவுக்குரியவனது வீட்டில் இடம் பெறும் போது நண்பனானவன் “நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதை அப்படியே செய்! என்று தட்டிக் கொடுப்பதால் குரி கெடு பலன்களை அப்படியே செய்வான். இவை யாவும் குருவின் திசா அல்லது புக்திக் காலங்களில் நடக்கும். ஆகையால் இவன் பகை வீட்டில் நவாம்சக வீட்டில் நின்றால் மட்டுமே சுப பலன்களைச் செய்வான்.

உத்திராடம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் தனது ஆட்சி வீடான மீன ராசியில் நின்று நீச பங்க ராஜ யோகம் பெற்று 9, 10ம் வீட்டுக்குரிய காரக பலன்களைத் தனது திசா காலத்தில் சுப பலன்களாக மிகச் சிறப்பாகச் செய்வார்.

இதே போல் திருவோணம் 1ல் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் இடம் பெற்று நட்புறவோடு கெடு பலன்களைச் செய்து 9, 10ம் வீடுகளுக்குரிய காரக பலன்களை அசுப பலன்களாகச் செய்வார்.

இப்போது இவர் திருவோணம் 2ம் பாதத்திலும், 3ம் பாதத்திலும் ஏதேனும் ஒன்றில் நின்றால் நவாமசக வீட்டில் ரிஷபத்திலோ அல்லது மிதுனத்திலோ இடம் பெறுவார்.  ராசியில் நீசம் பெற்ற இந்த குரு பகவான் நவாமசக வீட்டில் மேலே சொன்ன இருவீடுகளிலும் பகை நிலை பெற்றுசுப பலன்களைச் செய்வார்.

ஆகையால் குரு பகவான் திருவோணம் 2, 3ல் ஏதேனும் ஒன்றில் நின்று நவாம்சக வீட்டில் ரிஷப வீட்டிலும், மிதுன வீட்டிலும் இடம் பெற்றால் பகை நிலை பெற்று சுப பலன்களைத் தனது  திசா, புக்திக் காலத்தில் செய்வான்.
திருவோணம் 4ம் பாதத்தில் இடம் பெற்றால் நவாம்சக வீட்டில் உச்சம் பெற்று நீச பங்க ராஜ யோகம் பெற்றுத் தனது திசா காலத்தில் மிக அதிகமான சுப பலன்களைச் செய்து குபேரனாக்குவான்.

அவிட்டம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம ராசியில் இடம் பெற்று  நட்புறவு பெறுவதால் அசுப பலன்களையே செய்வான்.

அவிட்டம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கன்னி ராசியில் இடம் பெற்று பகை நிலை பெற்று சுப யோகத்தைச் செய்வான்.

ஆகையினால்தான் யோகம் சுப யோகமா? அவ யோகமா? என்பதை நன்கு ஆராய வேண்டும். 
இனி சனி பகவான் 9ம் வீட்டில் இடம் பெற்று என்ன மாதிரியான பலன்களைச் செய்யப் போகிறார்? என்று பார்க்கலாம்.

No comments: