Thursday, March 1, 2012

மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கையில் பாகம் 2.

இறை நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் ஜோதிஷ சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்கும். இறைவன் கிரகங்களை மனிதனைப் படைப்பதற்கு முன்பே படைத்து விட்டான். ஒவ்வொரு மனிதனும் பூமியில் பிறந்து வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொறுப்பை நவகிரகங்களிடம் ஒப்படைத்தான். படைத்தல் தொழிலை எப்படி பிரம்ம தேவன் பார்த்துக் கொண்டாரோ அதே போல் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க வேண்டிய நன்மை தீமைகளை முற்பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு எற்ப வழங்க வேண்டும் என்பதே இறைவன் கிரகங்களுக்கு இட்ட கட்டளை. இறைவன் ஆனாலும் சரி, மனிதன் ஆனாலும் சரி கிரகங்கள் எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறதோ அந்த வழியில் தான் அவர்கள் செல்ல முடியும். இதற்கு உதாரணம் ஸ்ரீராமன் வனவாசம் சென்றதும், சீதையைப் பிரிந்ததும், மற்றும் அவன் அனுபவித்த விஷயங்கள் அனைத்துமே ஆகும். மனிதனாகப் பிறவி எடுக்கும் அனைவருக்கும் எப்படிப் பட்ட துன்பங்கள் வந்தாலும் நேர்மை தவறாமல் வாழ வேண்டும் என்பதற்கா கவே எடுக்கப் பட்ட அவதாரம் அது. துன்பங்கள் எவ்வளவு வாட்டினாலும் நேர்மை தவறாமல் வாழ்ந்திருந்தோம் என்றால் அதற்கேற்றாற்போல் இந்தப் பிறவியில் அவர்களது வாழ்க்கை சிறப்பாகவே அமையும். கர்மாக்களில் சஞ்சித கர்மா, பிராப்த கர்மா என்று உண்டு. சஞ்சித கர்மா என்பது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் மூட்டை. பிராப்த கர்மா என்பது இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் முற்பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பதான் இப்பிறவி அமையும். மனிதன் பிறக்கும் போது இறைவனின் ஆணைப்படி கிரகங்கள் அவரவர் முற்பிறவியில் செய்த வினைக்கேற்றாற்போல் அவரவர் ஜாதகங்களில் இடம் பெற்று அதற்கேற்றாற் போல் பிரம்மதேவன் அவர்களது தலை எழுத்தை நிர்ணயம் செய்வான். 

மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கையில் பாகம் 1.

ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கையில்தான் என்பதே.   ஒரு மனிதன் முற்பிறவியில் என்ன பாவ புண்ணியங்கள் செய்தானோ அதற்கேற்றாற் போல்தான் இந்தப் பிறவியில் அவனுக்கு ஜாதகம் அமையும். அதற்கேற்றாற் போல் அவன் சுப விஷயங்களையோ அல்லது அசுப விஷயைங்களையோ அனுபவிப்பான். அவன் சுப விஷயங்களை அனுபவிப்பானா? அல்லது அசுப விஷயங்களை அனுபவிப்பானா? என்பதைத்தான் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் கூற வேண்டும். சிலர் பிறக்கும் போதே பணக்காரனாக அனைத்து யோகங்களை யும் முழுமையாக அனுபவிப்பவனாக இருப்பான். சிலர் பிறக்கும் போது ஏழ்மையில் பிறந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனது சொந்த முயற்சி யினால் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து மிகப் பெரும் செல்வந்தனாவான். சிலர் ஏழ்மையிலேயே பிறந்து கடைசி வரை ஏழ்மை நிலையையே அனுபவிப் பான். இதற்கெல்லாம் காரணம் என்ன?  அவர்களது ஜாதகமே அத்ற்குக் காரணம். சில முற்போக்குவாதிகள், 'ஜாதகம், ஜோதிடம் என்பதெல்லாம் பொய் என்றும், பித்தலாட்டம் என்றும் கூறுவார்கள். ஆனால் நேற்று வரை மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு முற்போக்குவாதி திடீரென்று தனக்கு ஒரு துன்பம் வரும் போது அதிலும் எதிர்பாராத வேளையில் வரும் போது, 'நேற்று வரை நாம் நன்றாகத்தனே இருந்தோம். இன்று என்னவாயிற்று? ஒரு வேளை நமக்கு நேரம் சரியில்லையோ? ஜோதிடம் என்பது உண்மைதானோ? என்றெல்லாம் அவன் மனம் அவனை ஆட்டிப் படைக்கும். அப்போதுதான் தன்னை மீறிய ஒரு சக்தி உண்டு என்பதையே அவன் உணர்வான். அவன் நல்லதொரு நண்பர்களைப் பெற்றிருந்தான் என்றால் அவர்களின் தூண்டுதலின் பேரில் ஜோதிடர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறுவான். ஜோதிஷ சாஸ்திரம் என்பது பொய்யல்ல. ஜோதிடர்களில் பொய்யுரைப்பவர்கள் இருக்கலாம். தனது உடலுக்கு நோய் என்று ஒன்று வரும் போது எப்படி மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறுகிறார்களோ அது போல் மனதிற்கு நோய் என்று ஒன்று வரும் போது மன நோய் மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெறுகிறார்களோ அது போல தனது யோக அல்லது அவ யோகங்களைப் பற்றிய தெளிவைப் பெற வேண்டும் என்றால் அவர்கள் ஜோதிடர்களைத்தான் நாட வேண்டும். சில மருத்துவர்களிடம் சென்றால் நோய் குணம் ஆவதும் உண்டு. ஆகாமல் போவதும் உண்டு. அப்போது மிகச் சிறந்த மருத்துவர்களைத் தேடிச் செல்வதைப் போல மிகச் சிறந்த ஜோதிடர்களையும் தேடிச் சென்றால்தான்  ஜோதிட சம்பந்தமான ஆலோசனைகளைப் பெற முடியும். அது மக்களின் கையில்தான் இருக்கிறது. அந்த மக்களையும் நன்முறையில் வாழச் செய்வது அவர்களது ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் கிரகங்களின் கையில்தான் இருக்கிறது.