Wednesday, February 29, 2012

ஆளும் கிரகங்களும் ஆட்சியாளர்களும்.

ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் முதல் ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து அரசர்கள் ஒரு காரியத்தை செயல் படுத்த வேண்டும் என்றால் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அந்தக் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதை நன்றாக ஆராய்ந்து வெற்றியில் முடியும் என்றால்தான் அந்தக் காரியத்தையே செய்வார்கள். போர் காலத்திலும் இது போன்றேதான் ஜோதிடரின் கூற்றின் துணை கொண்டு நல்ல நாள் குறித்து போருக்குச் செல்வார்கள். இராமாயண காலத்தில் இராவணன் தனக்கும், தன் குலத்திற்கும் இராமனால்தான் அழிவு என்று தெரிந்தவுடன் தனக்குப் பிறக்கும் குழந்தையின் (இந்திரஜித்) ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் லாப ஸ்தானத்தில் இடம் பெற வேண்டும் என்று அனைத்து கிரகங்களுக்கும் ஆணையிட்டான். இராமாயாண காலத்தில் ராகு, கேதுககள் கிடையாது. மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களும் இராவணனுக்கு அடிமைப் பட்டுக் கிடந்தன. அந்த 7 கிரகங்களையும், இராவணன் தனது ஆசனத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாக்கி அவற்றின் நெஞ்சில் ஏறி மிதித்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்வான்.  இதை தனது நித்திய செயலாகக் கொண்டிருந்தான். படிக்கட்டுகளில் இராவணனது ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கிடந்த கிரகங்களில் சனி பகவானைத் தவிர மற்ற கிரகங்கள் நிமிர்ந்து படுத்துக் கொண்டிருந்தன. சனி பகவான் மாத்திரம் குப்புறப் படுத்து அதாவது கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தார். தேவர்களையும், ரிஷிகளையும் இராவணன் ஆட்டிப் படைத்ததோடு கிரகங்களையும் அடிமையாக்கி வைத்திருந்ததைக் கண்டு தேவர்களும், ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட இந்தச் செய்தியை செவிமடுத்த ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து தான் இராமாவதாரம் எடுத்து இராவணனை வதம் செய்வதாகக் கூறினார்.  இதன் முதல் கட்டமாக நாரத மகரிஷி இராவணனது அரண்மனைக்குச் சென்று இராவணனைச் சந்தித்தார். அப்போது கிரகங்கள் அனைத்தையும்  தனது ஆசனத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாக்கி வைத்திருப்பதைக் கண்டார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 'ஒரு மனிதனுக்குக் கேடு காலம் வர வேண்டும் என்றால் அவனை சனி பார்த்தால் உடனே அவனுக்குக் கேடு வந்து விடாதோ?' என்று அவருக்குத் தோன்றியது. உடனே சாமர்த்தியாமாக இராவணனைப் பார்த்து, 'இராவணா! சனியைத் தவிர அனைத்துக் கிரகங்களும் நிமிர்ந்து படுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நெஞ்சில் மிதித்து ஏறுவது போல் சனியின் நெஞ்சிலும் நீ மிதித்து ஏற வேண்டாமா?' என்று நாரதர் இராவணனை முடுக்கி விட்டார். இராவணன் மிகவும் புத்திசாலிதான்.  இருந்தும் என்ன செய்ய? அவனது போதாத காலமோ என்னவோ அவனது புத்தி வேலை செய்யவில்லை. சனி பகவானை நோக்கி, 'சனியே! நிமிர்ந்து படு!  நான் உன் நெஞ்சில் மிதித்து ஏறி என் ஆசனத்திற்குச் செல்ல வேண்டும்' என்று ஆணையிட்டான் இராவணன். சனியும் நிமிர்ந்து படுத்தான். அவனது பார்வை இராவணன் மீது விழுந்தது. அவனது கெட்ட நேரம் தொடர்ந்தது. இனி மேலே கூறிய விஷயத்திற்கு வருவோம். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு (இந்திரஜித்) (நவகிரகங்களை தனக்கு ஏறிச் செல்லும் படிகளாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பே) இராமனால் அழிவு உண்டாகி விடக் கூடாது என்று கிரகங்கள் அனைத்தையும் தனது புதல்வனின் (இந்திரஜித்) ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் அமரும் படி கட்டளை இடுகிறான்.இதை அறிந்த நாரத மகரிஷி சனி பகவானிடம் 'அனைத்து கிரகங்களும் லாப ஸ்தானத்தில் இடம் பெற்று விட்டால் இவனுக்கு அழிவே கிடையாது என்றாகிவிடும். அப்படி ஆகி விட்டதென்றால் இந்த அசுரர்களால் அனைவருக்கும் தொல்லையே' என்று கூறி மேலும், 'நீ மெதுவாக உனது காலை 12ம் வீட்டில் வைத்துவிடு.' என்றும் ஆலோசனை கூறினார். அதன் படியே சனி பகவானும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 12ம் வீட்டில் காலை எடுத்து வைத்து விட்டார். இதைக் கண்ட இராவணன் கோபம் கொண்டு சனி பகவானின் காலை வெட்டினான். ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீராமவதாரம் எடுப்பதற்குக் காரணம் இராவணன் தேவர்களையும், கிரகங்களையும் துன்புறுத்திய காரணத்தினால்தான். கிரகங்களை சிறைப் பிடித்த இராவணன் அவர்களைப் படிக்கட்டுக்களாக்கி சனியின் பார்வை அவன் மேல் விழுந்த போது அவனுக்குக் கேடு காலமும் ஆரம்பித்தது. பொதுவாக ஜோதிடர்கள் அனைவருமே இராமாயணத்தில் இடம் பெற்ற இந்த விஷயத்தை தனது வலைப் பதிவுகளில் எழுதியிருக்கிறார்கள், ஆகையினால் இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திரஜித் இராமாயணப் போரில் மடிந்ததற்கு இன்னும் ஒரு முக்கிய காரணமும் ஒன்று உண்டு. அதாவது இராவணன் சனி பகவானின் காலை வெட்டிய போது அவரது காலில் இருந்து விழுந்த சதைப் பிண்டமானது லக்னத்தில் போய் விழுந்தது. இந்த சதைப் பிண்டமே மாந்தி. ஒரு ஜாதகத்தில் ஒரு மனிதனின் நிலையை அப்படியே புரட்டிப் போடுகிறவன் மாந்தி. சிலர் மாந்தியை சனி பகவானின் மைந்தன் என்பர். எனவே தகப்பனும், பிள்ளையுமாகச் சேர்ந்து இந்திரஜித்தின் மரண ஒலையை எழுதினார்கள் என்று கூறினால் மிகையாகாது. சரி. ஆனால் மக்களில் ஜோதிடத்தை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். நம்பாதவர்களும் இருக்கிறார்கள்,  ஜோதிடத்தை நம்பாத ஒருவன் இது வரை வாழ்வில் சந்தோஷத்தையே அனுபவித்திருந்து தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் தன் உழைப்பே தவிர இதில் ஜோதிடம் என்பது எங்கிருந்து வ்ந்தது? என்று மிகவும் ஆணித்தரமாகப் பேசியவன் கூட தன் தொழிலில் சோதனை எற்பட்டு தனக்கு ஒரு கஷ்டம் என்று ஒன்று வரும் போது ஒரு வேளை ஜோதிடம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் அவனுக்குத் தோன்றுகிறது. ஜோதிடத்தில் அவ நம்பிக்கை எப்போது ஏற்படுகிறது? உதாரணமாக சென்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற கேள்விக்கு பல ஜோதிடர்கள் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? இதுதான் ஜோதிடத்தை பலர் நம்பாததற்குக் காரணம். ஆனால் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வருவார் என்று சொன்ன சில ஜோதிடர்களும் உண்டு. ற்போது நடந்து முடிந்த தேர்த்லில் ஜெயிக்கப் போவது தி.மு.கவா அல்லது அ.தி.மு.கவா என்று பல ஜோதிடர்களும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறினார்கள். அதில் ஒரு சில ஜொதிடர்கள் மட்டுமே மிகச்சரியாக அ.தி.மு.க கட்சிதான்வெற்றி அடையப் போகிறது  என்று மிகத் தெளிவாகக் கூறினார்கள்.ஏன் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று அவரது ஜாதகத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கீழே தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.இதுதான் தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.இவருக்கு 24-11-2011 வரை ராகு திசா காலம் நடப்பில் இருந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் நடந்த சமயமும், தேர்தல் முடிவுகள் வெளி வந்த சமயமும் அவருக்கு ராகு திசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ராகுவும், செவ்வாயும் இவருக்கு யோகத்தைக் கொடுப்பவர்கள்.  ஜாதக ரீதியாகவும் சரி அன்றைய தினம் கோட்சார ரீதியாகவும் சரி கிரகங்கள் அனைத்தும் அம்மாவிற்கு அருமையாக ஒத்திழைத்தது. ஆகையால் இவரால் வெற்றி அடைய முடிந்தது. அன்றைய கோட்சாரமும் அவருக்கு ஒத்துழைத்தது. இதுதான் அவர் வெற்றி அடையக் காரணமாகும். 

1 comment:

Nagarajan.S said...

திருமதி சீதாலக்ஷ்மி அவர்களுக்கு,

தாங்கள் தங்களின் ஜோதிட பாடத்தை தொடர்ந்து வெளியிடலாமே? ஏன் ஐந்து பாடங்களுக்கு மேல் வெளியிடவில்லை.

நாகராஜன்.சு