Thursday, October 31, 2013

ஜோதிடப்பாடம் 7.

இது வரை 12 ராசிகளும் நமக்கு என்ன விதமான பலன்களைச் செய்கின்றன என்றும் அந்த பலன்களுக்குரிய கிரகங்கள் என்னென்ன என்றும் பார்த்தோம். அதாவது ஒரு பலனை ஒரு ராசி செய்கிறது என்றால் அந்த வீட்டின் பலனை அதில் இடம் பெற்றிருக்கும் கிரகமும் சேர்ந்து செய்யும் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்த உடன் அந்த மனிதனின் ஜாதகத்தில் இடம் பெறும் கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இடம் பெறுகின்றனர் என்பதையும் அந்த ராசியின் பலன் என்ன என்பதையும் அந்த ராசியில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் எந்தெந்த விதத்தில் நன்மை அல்லது தீமை செய்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய வேண்டும். ஏற்கனவே 12 ராசிகளின் பெயர்களையும் அவற்றின் அதிபதி கிரகங்களையும் பற்றிக் கூறியிருக்கிறேன். மீண்டும் நியாபகப் படுத்துகிறேன். மேஷ, விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய். ரிஷப, துலா ராசிகளின் அதிபதி சுக்கிரன். மிதுன, கன்னி ராசிகளின் அதிபதி புதன். கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். தனுசு, மீன ராசிகளின் அதிபதி வியாழன் என்ற குரு பகவான். மகர, கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான். அதோடு இந்த 12 ராசிகளில் லக்னம் எதுவோ அதுவே முதல் வீடு என்றும் கூறியிருக்கிறேன். அதோடு இன்னும் சில விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேஷம், கடகம், துலாம், மகரம் என்ற இந்த 4 ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் என்ற இந்த 4 ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்ற இந்த 4 ராசிகளையும் உபய ராசிகள் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இதைப் பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறேன். லக்னமாகிய முதல் வீடு மற்றும் 4, 7, 10 ஆகிய வீடுகள் யாவும் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதே லக்னமாகிய முதல் வீடு மற்றும் 5, 9 ஆகிய வீடுகள் யாவும் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகின்றன. லக்னமாகிய முதல் வீடு கேந்திர ஸ்தானத்திலும், திரிகோண ஸ்தானத்திலும் இடம் பெறுவதால் லக்னாதிபதி முழு சுபராகிறார். அதே போல் கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகளும் திரிகோண ஸ்தானங்களின் அதிபதிகளும் முழு சுபர்களாகிறார்கள். சென்ற பாடத்தில் 12 ராசிகளும் சொல்லும் விஷயங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதன் படிப் பார்க்கும் போது லக்னம், 2வது வீடாகிய தன ஸ்தானம், 4வது வீடாகிய கேந்திர ஸ்தானம், 5வது வீடாகிய திரிகோண ஸ்தானம், 7வது வீடாகிய களஸ்திர மற்றும் கேந்திர ஸ்தானம், 9வது வீடாகிய திரிகோண மற்றும் பாக்கிய ஸ்தானங்கள், 11வது வீடாகிய லாப ஸ்தானம் இவை யாவும், மற்றும் இவற்றின் அதிபதிகள் யாவும் கெடக் கூடாது. மேலே கூறிய வீடுகளோ அல்லது அவற்றின் அதிபதி கிரகங்களோ கெடக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டால் அதற்கான பதில் இதோ. ஜோதிட சாஸ்திரத்தில் 3, 6, 8, 12ம் வீடுகள் பற்றியும், பாதக ஸ்தானைங்கள் பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதில் முழுமையாக கெட்ட வீடு என்ற வகையில் 6ம் வீடும், பாதக ஸ்தானங்களும் கெடு பலனைச் செய்கிற வீடுகளாகும். 3ம் வீடு தைரியத்திற்கும், வெற்றி தோல்விகளுக்கும் உரிய வீடு என்பதால் அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன. அதே போல் 8ம் வீடு ஆயுளைப் பற்றியும், மாங்கல்ய பலத்தைப் பற்றியும் சொல்வதால் மேலே கூறிய மாதிரி அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன. அதே போல் 12ம் வீடு நிம்மதியான சாப்பாட்டிற்கும், தூக்கத்திற்கும் உரிய அயன, சயன போக ஸ்தானமாகையால் மேலே கூறிய மாதிரி அந்த வீட்டில் இடம் பெறும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த வீட்டின் அதிபதி கிரகம் இடம் பெறும் ராசியைப் பொறுத்தும், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன. ஒரு ஜாதகத்தில் சர ராசிகளான மேஷமோ, கடகமோ, துலா ராசியோ, மகர ராசியோ லக்னமாக இருந்தால் லாப ஸ்தானமாகிய 11ம் வீடும், அதன் அதிபதியும் கெடுபலன்களைச் செய்யும். மேஷம் லக்னமாக இருந்தால் 11வது வீடான் கும்ப ராசியும், அதன் அதிபதியான சனி பகவானும் கெடு பலன்களைத் தனது திசா அல்லது புக்திக் காலத்தில் செய்வார்கள். கடகம் லக்னமாக வந்தால் 11வது வீடான ரிஷப ராசியும் அதன் அதிபதியான சுக்கிர பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள். துலாம் லக்னமாக வந்தால் 11வது வீடான சிம்ம ராசியும் அதன் அதிபதியான சூரியனும் தனது திசா, புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள். மகரம் லக்னமாக வந்தால் 11வது வீடான விருச்சிக ராசியும் அதன் அதிபதியான செவ்வாய் பகவானும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள். இதே போல் ஒரு ஜாதகத்தில் ஸ்திர ராசிகளான ரிஷபமோ, சிம்மமோ, விருச்சிகமோ, கும்பமோ லக்னமாக இருந்தால் அந்தந்த ராசிகளின் திரிகோண ஸ்தானமான மற்றும் பாக்கிய ஸ்தானமான 9ம் வீடும், அந்த வீட்டுக்குரிய அதிபதியும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்வார்கள். ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய மகர ராசியும், அதன் அதிபதியான சனி பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள். சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய மேஷ ராசியும், அதன் அதிபதியான செவ்வாய் பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள். விருச்சிகம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய கடக ராசியும், அதன் அதிபதியான சந்திர பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள். கும்பம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய துலா ராசியும், அதன் அதிபதியான சுக்கிர பகவானும் தனது திசா புக்திக் காலைங்களில் கெடு பலன்களைச் செயவார்கள். இதே போல் ஒரு ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவற்றில் ஏதேனும் ஒன்று லக்னமாக வந்தால் இவற்றின் நேர் 7ம் வீடான கேந்திர, மற்றும் களஸ்திர ஸ்தானமும், அதன் அதிபதி கிரகமும் தனது திசா புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும். மிதுனம் லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான தனுசு ராசியும் அதன் அதிபதி கிரகமான குரு என்ற வியாழ பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும். கன்னி லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான மீன ராசியும் அதன் அதிபதி கிரகமான குரு என்ற வியாழ பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும். தனுசு லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான மிதுன ராசியும் அதன் அதிபதி கிரகமான புத பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும். மீனம் லக்னமாக வந்தால் நேர் 7ம் வீடான கன்னி ராசியும் அதன் அதிபதி கிரகமான புத பகவானும் தனது திசா அல்லது புக்திக் காலங்களில் கெடு பலன்களைச் செய்யும். இப்படி சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு சுப வீடுகள் என்ற வரிசையில் வரும் 11, 9, 7 ஆகிய வீடுகளே கெட்ட பலன்களைச் செய்யும் வீடுகளாகவும் அதன் அதிபதி கிரகங்களூமே கெட்ட பலன்களைச் செய்பவர்களாகவும் வருகிறார்கள். ஒவ்வொரு கிரகங்களுக்கும் இரண்டு வீடுகளின் ஆதிபத்தியங்கள் உண்டு. அதாவது சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இரு வீடுகளுக்குரிய கிரகங்களாக வருவதனால் இரு வீட்டு பலன்களைச் செய்யும். அப்படி இரு வீடுகளுக்கு உரிய கிரகம் இரண்டு வீடுகளூமே சுப வீடுகளாக இருந்தும் கூட ஒரு வீடு பாதக வீடாக அதாவது பாதக ஸ்தானமாக வரும் பட்சத்தில் அந்த கிரகம் பாதக பலன்களை அதாவது கெடு பலன்களை மட்டுமே தனது திசா அல்லது புக்திக் காலங்களில் செய்யும். ஆகையினால் அந்த கிரகம் ராசியில் அதாவது ராசிச் சக்கரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி நவாம்சக வீட்டில் கெட வேண்டும். ஆனால் பாதகாதிபதியாக வரும் ஒரு கிரகம் ராசியில் 6ம் வீட்டில் நிற்பது நன்மை செய்யும். அப்போது இந்த பாதகாதிபதி நவாம்சக வீட்டில் கெடாமல் சுப பலம் பெற வேண்டும். அதே நேரம் 6ம் வீட்டுக்கும் இன்னொரு சுப வீட்டிற்கும் உரிய கிரகம் நவாம்சக வீட்டில் சுப பலம் பெற வேண்டும். 6ம் வீட்டிற்குரியவன் பாதக ஸ்தானத்திலோ அல்லது பாதக ஸ்தானத்திற்குரியவன் 6ம் வீட்டிலோ ராசியில் நிற்பது நன்மை தரும். அப்போது அவன் நவாமசக வீட்டில் சுப பலம் பெற வேண்டும். இதன் விளக்கங்களை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

1 comment:

Udhaya Kumar said...

அம்மா அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பாடம் மிகவும் எளிமையக
உள்ளது.
நன்றி